கோட்சார பலன் என்பது பொதுவான ராசிபலன் பார்ப்பது அல்ல. ஒரே ராசியில் (அ) ஒரே நட்சத்திரத்தில் பல லட்சம் பேர் பிறந்திருக்கும்போது, எல்லோருக்கும் பொதுவாகச் சொல்லப்படும் "ராசிபலன்' எவ்வாறு பொருந்தி வரும்? வயதிற்கும், தசாபுக்திக்கும் ஏற்ப கோட்சார பலன்களும் மாறுபடும் அல்லவா?
ஜெனன ஜாதகத்தின் கிரக அமைவு களின் அடிப்படையில் கோட்சார- கிரக நகர்வுகளையும், இணைத்து, பாகை முறையிலும், ஜெனன ஜாதகத்திலுள்ள கிரகம் அமைந்துள்ள பாகையின்மீது, கோட்சாரத்தில் அதே பாகையில் ஒரு கிரகம் பயணிக்கும் காலத்தில் ஏற்படும் பலன்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். வருட மற்றும் மாத கிரகப் பெயர்ச்சிகளை மட்டுமே ஆய்ந்து ராசிபலன் கூறுவது எல்லோருக்கும் எப்படி சரியாக பொருந்தும்? இது பொது பலனுக்கு மட்டுமே இருக்கும். ஜெனன ஜாதக அடிப்படையில் தசாபுக்தி, அந்தரத்துடன் கோட்சார பலன்களையும் இணைத்து பலன் காண்பதே பொருத்தமானதாக இருக்கும்.
இனி கோட்சாரரீதியான சில பொது பலன்களைக் காண்போம். இந்த பலன்கள் எண்பது சதவிகிதம் சரியாகவே இருக்கும்.
ஜென்ம ராசிக்கு ஐந்தில், கோட்சார சூரியன் சஞ்சரிக்கும் காலம், தடை, தாமதங்கள்.
ஜெனன கால குருவுக்கு விரயத்தில் சூரியனோ (அ) ஐந்தில் செவ்வாயோ இருக்கும் காலத்தில் நன்மைகள் உண்டாகும்.
ஜென்ம ராசிக்கு, ஆறில் சுக்கிரன் சஞ்சரிக்கும் காலத்தில், சுக்கிரனின் காரகத்துவம் பாதிப்படையும்.
கோட்சாரத்தில் சனியும், செவ்வாயும் சமசப்தமமாக இருக்கும் காலத்தில், ஜெனன ராசியிலுள்ள சனிமீதோ (அ) செவ்வாய் மீதோ, ராகு பயணிக்கும் காலம், யோக திசையானாலும்கூட, பாதிப்புகள் இருக்கவே செய்யும்.
ஜெனன ஜாதகத்திலுள்ள சுக்கிரனுக்கு நான்கில், சனி பயணிக்கும் காலத்திலும் நற்பலன்களை எதிர்பார்க்கக் கூடாது.
ஜெனன ஜாதகத்திலுள்ள சனிக்கு லாபத்தில் சந்திரன் இருக்கும் நாட்களில் நற்பலன் உண்டு.
ஜென்ம ராசிக்கு, அஷ்டமத்தில், கோட்சார ராகு இருக்கும் காலத்தில், எதிலும் எச்சரிக்கை தேவை.
துலா லக்னமாகி, பாதகஸ்தானமான சிம்மத்தில் மக நட்சத்திரத்தில், கோட்சார சனி பயணிக்கும் காலத்தில், பேராசையினால் நஷ்டமடைய நேரிடும்.
செவ்வாய் (அ) ராகு, 6, 8-ஆம் பாவத்தில் இருந்து, கோட்சார செவ்வாய் அங்கு சஞ்சரிக்கும் காலத்தில் சிறு விபத்தோ (அ) கண்டமோ ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஒருவருக்கு ராகு தசை நடைபெறும் காலத்தில், கோட்சாரத்தில், அர்த்தாஷ்டம, அஷ்டம (அ) ஏழரைச் சனியும் இணைந்து நடைபெற்றால், கெடு பலன்கள் உண்டு.
பிள்ளைகளில் யாருக்கேனும், அஷ்டம சனி நடைபெறும் காலம், பெற்றோரையும் பாதிப்பதைக் காணலாம்.
வாழ்க்கை துணைக்கு, அர்த்தாஷ்டம, அஷ்டம, கண்டக, (அ) ஏழரைச் சனி, கோட்சாரத்தில் நடைபெறும் காலத்தில் அது மற்ற ஒருவரையும் பாதிக்கும்.
ஆறு (அ) எட்டுக்குடையவன் தசை நடக்கும்போது, கோட்சாரத்தில், அர்த்தாஷ்டம, அஷ்டம (அ) ஏழரைச் சனியும் நடைபெற்றால் சோதனையும், வேதனையும்தான்.
ஜாதகத்தின் மூன்றாம் அதிபதிமீது, அஷ்டமாதிபதி சென்றாலும், (அ) அஷ்ட மாதிபதிமீது மூன்றாம் அதிபதி சென்றா லும், அந்த காலகட்டம், கோட்சாரத்தில் கடுமை காட்டும்.
ஜென்ம ராசிக்கு இரண்டில் கோட்சார குரு பயணிக்கும் காலத்தில், ஜாதகத்தில் அஷ்டமாதிபதியின் பலம் குறையும்.
ஜெனன ஜாதகத்திலுள்ள கேதுமீது, மாந்தி உட்பட எந்த கிரகம் கோட்சாரத்தில் பயணிக்கும்போதும், மன இறுக்கம் ஏற்படும்.
பிறந்தகால ஜாதகத்திலுள்ள கிரகத்திற்கு 6, 8-ல் கோட்சார கிரகம் இருப்பின், அந்த கிரகத்தின் காரகத்துவம் கோட்சாரத்தில் கிடைக்காது.
ஜெனன ஜாதக மாந்தியின்மீது கோட்சார ராகு செல்லும் காலம் மரண பயத்தையோ (அ) அதற்கு சமமான கண்டத்தையோ (அ) மனரீதியான பாதிப்புகளோ இருக்கும்.
ஜெனன ஜாதகத் திலுள்ள, ராகுவின்மீது கோட்சார சனி பயணிக்கும் காலத்திலும், (அ) ஜெனன ராசியில் கோட்சார ராகு பயணிக்கும் காலத்திலும், மிகக் குறிப்பாக ஜென்ம நட்சத்திரப் பாதத்தில் ராகு பயணிக்கும் காலத்திலும், மன இறுக்கம் மற்றும் பாதிப்புகள் இருக்கவே செய்யும். ராகுவின் இடத்தில் கேதுவை எடுத்துக்கொண்டால், சில மாறுபாடு களுடன்கூடிய மேற்படி பலன்கள் இருக்கவே செய்யும். அப்பொழுது, சந்திர தசையோ (அ) ராகு தசையோ நடைமுறையில் இருப்பின் பாதகத்தையும், இருக்கும் இடத்திற்குத் தகுந்தாற்போல் செய்யும் வாய்ப்பு உண்டு.
ஏழரைச் சனியைவிட அஷ்டம சனி கொடியது.
ஐந்தாம் இடத்தில் கோட்சார சனி வக்ரம் பெறும் காலத்தில் குழந்தைகளினால் சுமை மற்றும் மனக்கவலை ஏற்படும்.
தற்சமயம், கோட்சார சனி ரிஷப ராசியைக் கடக்கும் காலம் வரை, உலகில் அமைதியின்மை, போர்ச் சூழல், ஊழல் அதிகரிப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமை போன்றவை இருக்கவே செய்யும்.
செல்: 63824 12545.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/13/plan-2026-01-13-18-33-20.jpg)